ITHU THATHUVOM.....

221)அழுதபிள்ளை சிரிச்சிதாம்; கழுதைப் பாலைப் குடிச்சிச்சாம் (இது ஒரு நகைச்சுவையான வழக்குத் தொடர்).
222) அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்.
223) அழுவார் (ஒப்பாரி வைத்து அழுவார்) அற்ற பிணமும்; ஆற்றுவார் (தீயை அணைப்பார்) அற்ற சுடலையும் (சுடுகாடும்) வீண்.
224) அழையா வீட்டிற்குள் நுழைய மாட்டார் சம்பந்தி (பெண்ணைக் கட்டிக் கொடுத்தவர்).
225) அழகாரி பட்டணத்திலும் (இந்திரலோகத்தின் தலைநகரிலும்) விறகுத் தலையன் (அசிங்கமான தோற்றம் கொண்டவன்) உண்டு.
226) அளக்கிற நாழி அகவிலையை (விலைவாசி உயர்வை) அறியுமா...? (நாழி என்ற முகத்தல் அளவை புழக்கத்தில் இருந்த கால கட்டத்தில் உருவான பழமொழி இது).
227)அளந்த நாழி கொண்டு அளப்பான் (நாம் செய்த வினைகள் திரும்பவரும் - விதைத்தது தான் விளையும் என்பது போன்ற பொருள் உடைய பழமொழி).
228)அளந்தால் ஒரு சாணுக்கில்லை (ஜான்-உயரம்) அரிந்தால் ஒரு சட்டிக்கு இல்லை(அளவு) அது பண்ணுகிற சேட்டையோ தாங்க முடியவில்லை (சேட்டை செய்கிற பூனை முதலிய வளர்ப்பு மிருகங்களைப் பார்த்து இப்படிச் சொல்வார்கள்).
229) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.
230) அள்ளாது குறையாது; சொல்லாது பரவாது (வார்த்தை- வதந்தி).
231) அள்ளிக் குடிக்கத் தண்ணி இல்லை; அவள் பேர் (பெயர்) கங்கா தேவி.
232) அள்ளிக் கொடுத்தால் ‘சும்மா’(ஓசி), அளந்து கொடுத்தால் ‘கடன்’.
233) அள்ளிக் கொண்டு போகும் போதும், நுள்ளிக் கொண்டு போகிறான்.
234) அள்ளுகிறவன் பக்கத்தில் இருந்தாலும் பரவாயில்லை கிள்ளுகிறவன் பக்கத்தில் இருக்காதே!
235) அறக்கப் பறக்கப்(வேக வேகமாகப்) பாடுபட்டாலும்; படுக்கப் பாய் இல்லை!
236) அறக்காத்தான் பெண்டிழந்தான்; அலுகாத வழி (தூரம்) சுமந்து அழுதான்( காதவழி என்ற நீட்டல் அளவை வழக்கில் இருந்த காலத்தில் இந்தப் பழமொழி தோன்றியிருக்க வேண்டும்; இந்தப் பழமொழியை மையமாகக் கொண்டு ஒரு பாலியல் நாட்டார் கதை உள்ளது).
237) அறக் குழைத்தாலும்  குழைப்பாள் (சோற்றை) அரிசியாய் இறக்கினாலும் இறக்குவாள்(அது மனைவியின் அப்போதைய மனநிலையைப்  பொறுத்தது).
238) அறச் செட்டு(சட்டத் திட்டம்) முழு நஷ்டம்( அளவுக்கு அதிகமான சிக்கனத்தாலும் நஷ்டமே வரும்).
239)அறத்தால் வருவதே இன்பம் (திருக்குறளின் கருத்தைச் சொல்லும் பழமொழி. இந்தப்பழமொழியில் இருந்து திருக்குறள் படைக்கப்பட்டதா, இல்லை. திருக்குறளை மையமாகக் கொண்டு இந்தப் பழமொழியைப் படைத்தார்களா.  . என்பதை ஆராய வேண்டும்).
240) அற நனைந்தவனுக்கு (முழுவதும் நனைந்தவனுக்கு) கூதல் (வாடை- விரையல்) ஏது? (முழுக்க நனைந்தவனுக்கு முக்காடு எதுக்கு? என்ற பழமொழியும் இதே கருத்தைத்தான் விளக்குகிறது).